Tuesday, May 6, 2014

ஏனென்றால் உன் பிறந்தநாள்...

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை 


- நகுலன்  


உன்னை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை நகுலனின் இந்த கவிதையும் நியாபகத்திற்கு வந்து விடுகிறது.  

எனக்கென்னவோ நீயும் நானும் மிக நிதானமாகவே காதலிக்கத் தொடங்கியது போன்ற பிரமை. அதுவே உண்மையாகவும் இருக்கலாம். உறுதியாக தெரியும் நம்முடையது கண்டதும் காதல் இல்லை. உனக்கும் அப்படியே. எந்நொடி என் மீது காதல் கொண்டாய், ஏன் அப்படி தோன்றியது என்றெல்லாம் ஓராயிரம் முறை கேட்டும் நீ அளித்த ஒரே பதில் ஐ லவ் யு டா இதுக்கு மேல கேக்காத சொல்ல தெரியல என்பது மட்டுமே. ஒருவேளை நீ என்னிடம் காதலை வெளிபடுத்தாமல் போயிருந்தால் காதல் என்னும் அத்தியாதினுள் நுழையாமலேயே இளமையைக் கடந்திருப்பேன் இல்லையேல் அந்த நொடி சஞ்சரிக்காமல் வேறு ஏதாவதொரு சந்தர்பத்தில் இன்னொருவளை காதலிக்க அவள் பின் அலைந்திருப்பேன். அப்படியெல்லாம் ஆக நீ விட்டுவிடவில்லை. ஆனாலும் உனக்கு ரொம்பவே தைரியம். நான் எதிர்பார்க்கா தருணத்தில் எதிர்பதற்குக் கூட அவகாசம் தராமல் என்னையும் காதலில் சிக்க  வைத்துவிட்டாய். சாமர்த்தியசாலிதானடி நீ. 

என்னை காதலிக்கவும் ஒருபெண் இருக்கிறாள் என்பதை விட வேறுஎன்ன பெரிய சந்தோசத்தை ஒரு பெண்ணால் ஆணுக்கு கொடுத்து விட முடியும். உன் காதலை என்னிடம் வெளிபடுத்த முயன்ற போது என்னை நிறைத்த முதல் சந்தோசம் இதுதான். இதுதாண்டா காதல். இப்படித்தான் காதலிக்க வேணும் என்று காதல் கற்றுக் கொடுத்தவள் நீ. உனக்கு முன்னால் நான் எப்போதுமே சிறுபிள்ளைதான். எதுவாயிருந்தாலும் எனக்கு நீயே கற்றுத்தர வேண்டும். கற்றுக் கொடுத்ததாகவாவது இருக்க வேண்டும். என்னை காதலிக்க ஆரம்பித்தபின் நீ நீயாகவே வாழவில்லை, சதா சர்வகாலமும் உன் சிந்தை முழுவதும் நானே நிரம்பியிருந்தேன். சில சமயங்களில் விளையாட்டாய் உன்னை புறக்கணிக்கும் போதெல்லாம் தலையணை நனைப்பாய், தண்டனையாய் நீ தூங்கும் வரை நான் முழித்திருந்து உன்னை தூங்கவைத்துப் பின் தூங்கச் செல்லவேண்டும் என்பாய். அப்படித்தான் நடந்தது. போர்வைக்குள் செல் புதைத்து உன்னோடு காதல் புரிந்த அந்த போதை நாட்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்கமாட்டேனடி. 

இப்போது யோசித்துப் பார்த்தால் எல்லாமே நகைச்சுவையாய் இருக்கிறது. எவ்வளவு சிறுபிள்ளையாய் இருந்திருக்கிறோம். எவ்வளவு சிறுபிள்ளையாய் காதலித்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாய் உன் காதலை உன் அன்பை என் மீது திணிக்கும் போதெல்லாம் இதற்குத் தகுதியானவன் தானா நான் என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டே இருக்கும். அதையும் மீறி ஒருவேளை உன் காதல் உன் பாசம் வாழ்நாள் முழுக்கக் கிடைக்காமல் போய்விட்டால் என்ற வெப்பம் ஆட்கொள்ளும் போது 'போதும் நிறுத்திவிடு நான் விலகிக் கொள்கிறேன், நீ இல்லா வாழ்கையை என்னால் நினைத்துக் கூட  பார்க்க முடியாது' என்று கத்தி அழத்தோன்றும். உன்னை விட்டு விலகத் தோன்றும். உனக்கோ என்னைக் காதலிப்பதைத் தவிர வேறு எந்த சிந்தையும் இருந்ததில்லை. நீ செய்தது தான் சரி. நானும் உன்னைப் போல் இருந்திருக்க வேண்டும். உன்னைக் காதலிப்பதைத் தவிர வேறு எதையும் யோசித்திருக்கக் கூடாது. யோசிக்க யோசிக்க பிரச்சனைகள் பூதமாய்கிளப்பி இப்போது கழுத்தை நெரிக்கிறதோ என்ற ஐயத்தில் இருக்கிறேன். 

நீ கேட்டு எதையுமே நான் மறுத்ததில்லை. இந்த பிறந்தநாளுக்கு நான் தான் முதலில் வாழ்த்த வேண்டுமென்று கூறினாய். இதைவிட வேறு என்ன வேலை எனக்கிருந்த முடியும். இருந்தும் உனக்கு நிச்சயிக்கபட்ட கணவன் எனக்கு முன்னர் உன்னை வாழ்த்த தவியாய் தவித்துக் கொண்டிருப்பானே, அவன் வாழ்த்திவிட்டுப் போகட்டும். என்ன இருந்தாலும் நீ வாழபோவது அவனுடன் தானே. தாராளமாய் வாழ்த்திவிட்டுப் போகட்டும். அப்போ நீ வாழ்த்தமாட்டாயா என்று மானசீகமாகவாவது கோபிப்பாய் என நினைக்கிறன், நினைப்பாய் என்ற நம்பிக்கையில் எனக்கென கட்டமைத்த உலகத்தில் என்றுமே தேவதையாய் இருக்கப்போகும் உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டி. 

உன் திருமண நிச்சயத்தை கூறும் போது கண்ணீருடன் கூறினாயே வாழ்க்கபூரா உன்கூட உன் மனைவியா வாழணும்னு நினைச்சேன் முடியல, நிச்சயமா நல்ல பிரண்டா இருப்பேன்டா என்று. இதை நீ கூறாமல் இருந்திருந்தால் கூட நாலு வாரம் தாடியுடன் அலைந்திருப்பேன், பின் அடுத்த ஜோலியைத் தேடி ஓடியிருப்பேன். இப்போது இப்படியொரு தண்டனை கொடுத்துவிட்டாயே? நகுலனையும் அவன் காதலி இப்படி தான் வாட்டி இருப்பாள் போல, போடி உன்னை போலெல்லாம் என்னால் இருக்க முடியாது. நானும் நகுலனோடு சேர்ந்துவிட்டேன், 

எனக்கு
யாருமில்லை
நான்
கூட. 


- நகுலன் 

9 comments:

 1. சாரி... சட்டுன்னு பின்னூட்டம் போட தோனல... ஏறக்குறை எல்லோருமே கடந்துவந்த பதையிது.... இந்த பாதையின் காதலர்களும் காதலிகளும் மாறலாம்... காதல் இருக்கும் நண்பரே !

  சாமானியன்
  எனது வலைப்பூ : saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. //சாரி... சட்டுன்னு பின்னூட்டம் போட தோனல... // சாரி எல்லாம் எதுக்கு ஜீ, நானும் உங்களைப் போல சாமானியன் தானே. இந்த பதிவ எழுதவே வேண்டாம்னு யோசிசேன். சில நொடிகள் சேமித்து வைக்கப்பட வேண்டியது. இந்த BLOGஅ டைரி மாதிரி பாவிக்கிறேன். அதனால் கிடைக்கும் நல்ல விஷயம், ஆறுதல் சொல்ல உங்களைப் போல் நால்வர் உண்டு. இந்த ஆறுதல் அக்கம்பக்கத்தில் இருந்து கிடைக்காது. சமூகம் கேலி பேசும். ஏன் காதலித்தாய் என்று நெம்பி முறிக்கும்.

   //ஏறக்குறை எல்லோருமே கடந்துவந்த பதையிது.... // அவர்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியது தான். எனக்கிது மனபோரட்ட காலகட்டம். இதுவும் கடந்து போகும்.

   நன்றி சாமானியன்.

   Delete
 2. முதல் மூன்று பத்திகளில் இருக்கும் ஒற்றுப்பிழைகளை கவனிக்கவும். என்னடா இவன் ஸ்கூல் பையனா அல்லது வாத்தியாரா என்று நினைக்க வேண்டாம், நான் எப்போதுமே அப்படித்தான்.

  புலம்பல்கள் ரசிக்கவைத்தது...

  ReplyDelete
  Replies
  1. //முதல் மூன்று பத்திகளில் இருக்கும் ஒற்றுப்பிழைகளை கவனிக்கவும். // நிச்சயமா ஜீ. தமிழ் எழுதி பல காலமாகுது. சடாரென்று எழுத ஆரம்பிக்கும் போது இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியல. இனி இது போன்ற விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்.

   //இவன் ஸ்கூல் பையனா அல்லது வாத்தியாரா என்று நினைக்க வேண்டாம், நான் எப்போதுமே அப்படித்தான். // அப்படியே இருங்க ஜீ. என்னை பொருத்தவரை கற்றுக் கொடுக்கும் அனைவருமே வாத்தியார் தான்.

   Delete
 3. "//என்னை காதலிக்கவும் ஒருபெண் இருக்கிறாள் என்பதை விட வேறுஎன்ன பெரிய சந்தோசத்தை ஒரு பெண்ணால் ஆணுக்கு கொடுத்து விட முடியும்.//"

  - நிதர்சனமான உண்மை.
  வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 4. புது வரவுக்கு வாழ்த்துகள்.காதல் பற்றிச் சொல்லியிருப்பவை அனைத்தும் காதலித்த அனைவரும் உணர்ந்தவை!அருமை!

  ReplyDelete
 5. இளம் பிராயத்தில் எல்லோர் வாழ்க்கையிலும் எந்த விதத்திலாவது புகுந்து கடைசிவரை நினைவில் நிற்கிறது காதல். காதலிகள் மாறலாம்! காதல் மாறாது! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. உள்ளத்தில் உள்ளதையெல்லாம் எழுத்தில் வடிக்கும் கலை எல்லோருக்கும் கைவருவதில்லை. உங்கள் முதல் முயற்சியே அற்புதமாக உள்ளது. நகுலனின் கவிதை வரிகளில் துவங்கி நகுலனின் கவிதைவரிகளோடு முடித்தது ரசிக்கவைக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. இப்போது யோசித்துப் பார்த்தால் எல்லாமே நகைச்சுவையாய் இருக்கிறது. எவ்வளவு சிறுபிள்ளையாய் இருந்திருக்கிறோம். எவ்வளவு சிறுபிள்ளையாய் காதலித்திருக்கிறோம்
  >>
  ஒரு காலத்தில் நாம் அழுததை இன்று நினைத்தால் சிரிப்பு வரும், சிரித்ததை நினைத்தால் அழுகை வரும்ன்னு சொல்லி இருக்காங்க, அதுப்போலதான் காதலும் அன்று நாம் செய்ததெல்லாம் நினைச்சுப் பார்த்தா இப்படி லூசுப் போல இருந்திருக்கோமேன்னு தோணும்.

  ReplyDelete