Monday, April 28, 2014

நான் முத்துசாமிப் பேரன் - என்னைப் பற்றி

படித்துமுடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்ற வேலையில்லா பட்டதாரிக்கு வேலைதேடும் நேரம்போக வாசிப்பைத் தாண்டி வேறு என்ன பொழுதுபோக்கு இருந்து விடமுடியும். அதனால் வாசிப்பும், வாசித்ததை அசைபோடுதலுமே தற்சமயம் முழுநேரத்தொழில். எழுதலாமே என்ற ஆர்வம் பொழுதுபோகா நல்ல நேரத்தில் தலைஉயர்த்திப் பார்த்ததால்  எழுதித்தான் பார்ப்போமே என அதற்கும் பிள்ளையார்சுழி போட்டாயிற்று. 

நல்ல வாசகனில் இருந்து நல்ல விமர்சகன் உருவாகிறான், நல்ல விமர்சகனில் இருந்து ஒரு படைப்பாளி உருவாகிறான், வாசிப்பு - விமர்சனம் - படைப்பு என்ற மூன்று கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் எழுத்துலகம் என்னையும் வாசிக்க வேண்டுமென ஒரு சிறிய ஆசை. 

சொந்தபெயரில் எழுதலாம் தான், ஏற்கனவே தண்டச்சோறு. போதாகுறைக்கு எம்ப்ளாயிமென்ட் நியூஸும், ஜிகே-டுடேவும் வாங்க வேண்டிய காசுகள் நாவலாகவும் இலக்கியமாகவும் மாறிக் கொண்டுள்ளன. "நீ எழுதி என்ன கிழிக்கபோற" என என்னைக் கிழிதெடுக்க என் சுற்றம் சுகமாய் காத்துக்கிடக்கிறது. சிந்தித்துப் பார்த்ததில் சில சமயங்களில் தலைமறைவு அவசியம் என்பான் முத்துசாமிப் பேரன். எனவே இந்த உலகில் எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் பேக்ஐடிக்களில் ஒன்றாய் இந்த பேக்கின் ஐடியும் இருந்துவிட்டுப் போகட்டுமே. காசா பணமா. லேரிபேஜ் நாமம் வாழ்க! செர்ஜி பிரைன் நாமம் வாழ்க. என்னை வாசிக்க நேசிக்கப்போகும் உங்கள் நாமம் வாழ்க! 

எழுத்தாளனாக வாழ வேண்டுமென்றெல்லாம் ஆசையில்லை. எழுத்தாளர்களோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான் முத்துசாமிப் பேரன். அவன் முயற்சி வெற்றியடையட்டும். 

- நான் முத்துசாமிப் பேரன்.